விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் பதவி நீக்கப்பட்டமையும், அதன் பின்னரான அவர்களின் அறிவிப்புகளும் திட்டமிட்ட நாடகங்களே என்றுதான் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.
நானும் அதே நிலைப்பாட்டோடுதான் இருக்கிறேன்.
அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஆனால், அவர்கள் எதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்? அரசாங்கத்திடம் அவர்கள் கண்டுகொண்ட முக்கியமான விடயம் என்ன? போன்றவற்றை இந்தவாரம் பார்க்கலாம்.
விமல்வீரவன்ச, தற்போதைய சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வருவதற்கு அதிமுக்கிய பங்களிப்பை மேற்கொண்டவர்.
நமக்கெல்லாம் தெரியும், இனவாதம் என்ற மையப்பொருளை வைத்து இந்த அரசாங்கம் ஆட்சியை பிடித்தது.
அதற்கு பல்வேறு விடயங்களைப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியால் வெந்து கொண்டிருக்கும் போது, இனவாத ‘பருப்பு’ எந்த அளவு வேகும் என்ற கேள்வி எழுகிறது.
அமெரிக்காவோடு உறவாடுவதே தேசத்துரோகம் என்று காட்டப்படும் கட்சியாகவே சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒருகாலத்திலிருந்தது.
ஆனால், தற்போது அந்த கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பசில் ராஜபக்ஷவின் வரவை அடுத்து, அமெரிக்கச் சார்பு அதிகரித்துள்ளதாகவும் கருதப்படுகிறது. யுகதனவி ஒப்பந்தம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
விமலின் பிரதமர் கனவு
இந்த நிலைமை தொடர்ந்தால், அமெரிக்க எதிர்ப்பு வாதத்தையே மையப்படுத்திய விமல் வீரவன்சவின் பிரதமர் கனவு என்னாவது? விமல் வீரவன்சவும் தமது எதிர்காலம் குறித்து யோசிக்க ஆரம்பித்தார்.
2019ஆம் ஆண்டு தேர்தலின் போது, விமல்வீரவன்சவுக்கு மகிந்தராஜபக்ஷவினால் ஒரு உறுதி மொழி வழங்கப்படுகிறது.
அடுத்ததாகப் பிரதமர் பதவிக்கு விமலே நியமிக்கப்படுவார் என்பதுதான் அந்த உறுதிமொழி.
அந்த நம்பிக்கையில்தான் விமல் வீரவன்ச அரசாங்கத்துக்காக உழைத்தார்.
ஆனால், இடையில் பசில் ராஜபக்ஷவை கட்சிக்குள் கொண்டு வந்ததும், அந்த நம்பிக்கை தவிடுபொடியானது. பசில் ராஜபகஷ எதிர்பார்த்ததைக் காட்டிலும் பலமாகக் கட்சிக்குள் கால் ஊன்றினார்.
பசில் ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவார் என்ற தகவல் பரவி இருக்கிறது. அதற்காகத்தான் அவர் இலங்கைக்கு வந்தார்.
அதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் பிரதமர் வேட்பாளராக விமல் வீரவன்சவை நியமிக்க வாய்ப்பில்லை.
இதனை புரிந்துகொண்ட விமல் வீரவன்ச கடும் கோபத்துக்கு உள்ளானார்.
இதுவே தற்போதைய சூழ்நிலை வரைக்கும் விமல் வீரவன்சவை கொண்டு வந்திருக்கிறது.
அவர் ராஜபக்ஷ குடும்ப ஆட்சி என்பதை மறைமுகமாகவும், நேரடியாகவும் எதிர்க்க ஆரம்பித்துள்ளார்.
கடந்த வாரம் கூட இதுசார்ந்த பல கடுமையான கருத்துக்களை விமல் வீரவன்ச முன்வைத்திருந்தார்.
விமல் வீரவன்சவும் மூழ்கும் கப்பலில் இருப்பதா?
நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. ச
ர்வதேச நாடுகள் பல இலங்கைக்கு ஒத்துழைக்கத் தயங்குகின்றன.
ஏன் இந்தியா கூட இலங்கைக்கு நிபந்தனைக்கு உட்படுத்தியே கடன் உதவியை வழங்கச் சம்மதித்துள்ளது (இதுகுறித்த பிரத்தியேக கட்டுரை ஒன்று வரும்).
இவ்வாறான சூழ்நிலையில் மூழ்கும் கப்பல் ஒன்றில் தொடர்ந்தும் பயணிப்பதா? என்ற சந்தேகம் விமலுக்கு ஏற்பட்டது.
அந்த சந்தேகத்தை அவர் ஏனையோருக்கும் பரப்பினார் – பறந்தார்.
ஆளுங் கட்சியின் மாஸ்ட்டர் ப்ளேன்.
இவற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தில் இருந்து பல அமைச்சர்களை, ராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் விலகியதெல்லாமே நாடகம்தான் என்ற கருத்தும் நிலவுகிறது.
அரசாங்கத்துக்கு எதிராக ஏதும் சொன்னால் பதவி நீக்கப்படுவார்கள் என்று தகவலை அனுப்ப இந்த நாடகம் நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.
ஆனால், இதுவொரு மாஸ்ட்டர் ப்ளேன் என்று இன்னொரு சாரார் நம்புகின்றனர். அது என்ன?
இப்போது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அற்றுப் போயுள்ளது.
அரசாங்கம் இன்னொரு தேர்தலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கக்கூடிய சூழ்நிலை இல்லை.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அரசாங்கத்தை வெறுத்துவருகின்றனர்.
இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த பெரும்பான்மையின மக்களே, அரசாங்கத்தைப் பொதுவெளியில் தூற்றுகின்ற நிலைமையை நாம் நாளாந்தம் ஊடகங்களில் காண்கிறோம்.
இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் கொள்கை ரீதியான பல விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
அவ்வாறு கொள்கை ரீதியான விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு பொருளாதார நெருக்கடியைத் தீர்த்தால், மீண்டு தமது கொள்கையாக ஆளுங் கட்சி கடைப்பிடிக்கின்ற இனவாதத்தை முன்கொண்டு செல்ல இன்னொரு அணி தேவை.
அந்த அணியை உருவாக்கும் நோக்கிலேயே திட்டமிட்டு ஒரு குழுவை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அப்படி என்றால் அந்த குழுவுக்கு விமல் தலைமை தாங்குவாரா? இதில் இருக்கின்ற சிக்கல்கள் என்ன? அடுத்த வாரம் பார்க்கலாம்.