விமல் உதய நாடகமாடுகிறார்களா? என்பதுதான் நாட்டு மக்கள் பெரும்பாலானோரது தற்போதைய ஒரே கேள்வியாக இருக்கிறது.
அமைச்சர்களாக இருந்து பதவி நீக்கப்பட்ட விமல்வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.
முக்கியமாக விமல் வீரவன்ச முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது தாக்கம் செலுத்தும்.
பசில் – விமல் வீரவன்ச முரண்பாடுகள்
பசில் ராஜபக்ஷவுக்கும் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன என்பது இந்த செய்தியாளர் சந்திப்பில் விமலும் உதயவும் தெரிவித்திருந்த கருத்துக்கள் உறுதி செய்கின்றன.
எப்படியாவது ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பசில் ராஜபக்ஷ நீண்டகாலமாக அரசியலில் போராடி வருகிறார்.
ஆனால் அவருக்கு அவரது ராஜபக்ஷ குடும்பத்திலேயே ஆதரவில்லை என்பது வேறுகதை.
2015 தேர்தல் முடிந்த கையோடு பசில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவர் அங்குப் பெருந்தொகையான பணத்தைக் கொண்டு சென்றதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
அதனையே விமல் வீரவன்ச தமது செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறாயினும் போட்டியிடுவதற்கு பசில் முயன்ற போதும், அதற்கு மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரும், பங்காளி கட்சிகளும் எதிர்ப்பினை வெளிப்படுத்தின.
பசிலுக்கு பதிலாக கோட்டாபய ராஜபக்ஷவை (தற்போதைய ஜனாதிபதி) களமிறக்கத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டார்கள்.
அப்போது பசில் தனித்து இயங்கவும் எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறும் கோரி இருப்பதாக விமல் குறிப்பிட்டிருக்கிறார்.
பசில் ராஜபக்ஷவை அரசாங்கத்துக்குள் உள்வாங்குவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்ற போதே, கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டது.
தற்போதைய ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுன, முழுமையாக பசில் ராஜபக்ஷவின் கட்சியாகும்.
அந்த கட்சியில் மகிந்தவுக்கோ, கோட்டாவுக்கோ குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் இல்லை.
மேலும் ஆளும் கட்சியில் முக்கிய நிலைகளில் இருக்கின்ற யாருக்கும் அதில் பதவிகள் இல்லை.
ஆனால் ஒருசில மாதங்களில் அந்த கட்சியை பல்வேறு வழிகளில் (நீங்கள் அறிந்ததே) முக்கிய இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.
அதற்கு விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களின் பங்களிப்பு இன்றியமையாதன.
உடனடி செய்திகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள் (Click here)
பலமான கட்சி தம்முடையது என்ற ஒரு விடயத்தைப் பயன்படுத்தி பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைந்து நிதி அமைச்சராகவும் பதவியைப் பெற்றுக் கொண்டார்.
ஆனால் இவை எவையும் ஆளுந்தரப்பின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்துடன் இடம்பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.
பசில் ஆளும் கட்சியில் பிரத்தியேகமான முகாம் ஒன்றை அமைப்பார் என்ற ஐயம், ராஜபக்ஷ குடும்பம் உள்ளிட்ட ஆளுந்தரப்பில் அனைவருக்கும் இருந்தது.
ஆனால் பசில்தான் டீல் காரர் என்று சொல்வார்களே.
அவர்தான் அனைத்து உறுப்பினர்களுக்குமான நிதியனுசரனையை வழங்குகின்ற குபேரன்.
அவருக்குப் பின்னர் பலமான கட்சி ஒன்றின் அனைத்து பதவி நிலைகளில் உள்ள உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
எனவே அவர் நினைத்தாற்போல் ஆட்சிக்குள் பிரவேசித்துவிட்டார்.
பசில்ராஜபக்ஷ அமெரிக்காவின் க்ரீன்காட் உரித்துடையவர்.
ஆகவே அவர் அமெரிக்கா சார்பாகச் செயற்படுவார் என்ற ரீதியான கருத்தோட்டம் இருக்கிறது.
அது எப்படி இருந்தாலும், அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றுக்கு யுகதனவி மின்னுற்பத்தி மையத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தில் அவர் மும்முரமாக இருந்தார்.
ஆனால் அமெரிக்காவை விமர்சித்தும், அமெரிக்காவுக்கு எதிராகக் கருத்துக்களைத் தூவியும் ஆட்சியைக் கைப்பற்றிய ஆளுங் கட்சி, மீண்டும் அமெரிக்காவின் சார்பாகச் செயற்படுவதை பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்கவில்லை என்று கருதப்படுகிறது.
இதனை அடுத்தே அவர்களுக்கு இடையில் முரண்பாடு தோன்றி, விமல் உள்ளிட்டவர்கள் எதிர்த்து, தனித்துச் செயற்படத் தீர்மானித்ததாகச் செய்திகள் உலாவின.
அதன் விளைவாக இன்று விமல் உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்கள் தனியாக ஒரு கூட்டாகச் செயற்படும் நிலைக்கு வந்திருக்கிறது.
ஆனால் இவை அனைத்தும் ஒரு நாடகமாக இருக்குமோ என்ற சந்தேகம் பலரின் மனதிலும் இருக்கிறது.
கொள்கைகள்
பொருளாதார, அரசியல் ரீதியான கொள்கைகள் விடயத்தில் விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும், பசில் ராஜபக்ஷவும் எப்படிப்பட்டவர்கள் என்று கடந்த காலத்தில் அவர்களின் செயற்பாடுகள் எப்படி இருந்தன என்று பார்த்தாலே விளங்கிடும்.
அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக என்ன மாதிரியான கொள்கையைப் பின்பற்றினார்களோ, அதே கொள்கையில்தான் ஜனாதிபதியும், அரசாங்க உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மை.
பௌத்த மேலாதிக்க குணம் என்பதே அவர்களின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது.
இதிலிருந்து யாரும் பிசகியதாகத் தெரியவில்லை.
விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்தி அரசிலிருந்து விலகுகிறார்கள் அல்லது விலக்கப்படுகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கிறது.
இது பல நாடகங்களின் தொகுப்பாகவே பார்க்கப்படுகிறது.
பசில் மீதான முரண்பாட்டை அவர்கள் சொன்னாலும், உண்மையில் அரசாங்கத்தின் இன்னொரு இரகசியத்தை அவர்கள் சரியாக புரிந்து கொண்டார்கள்.
அது என்ன?
விமல் உதய நாடகமாடுகிறார்களா? அரங்கேற்றும் நாடகம் என்ன? ஞாயிற்றுக் கிழமை அடுத்த பாகத்தில் சந்திப்போம்.