கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் பல்கலைக்கழக மாணவியை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது.
யுவதி பல்கலைக்கழக மாணவி என பின்னர் தெரியவந்துள்ளது.
அவர் 24 வயதுடையவர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டில் படித்து வந்தார்.
இக்கொலை தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, சந்தேக நபரை விரைவாகக் கைது செய்ய கொழும்பு பிரதேசத்தில் பல குழுக்கள் குவிக்கப்பட்டிருந்தன.
இதன் விளைவாக இன்று மாலைக்குள் சந்தேகநபரை கைது செய்ய முடிந்தது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டவுடன், அவர் சென்று வந்ததாக சந்தேகிக்கப்படும் பல பகுதிகளுக்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டன.
ஆனால் இந்த சந்தேக நபர் இறுதியாக வெல்லம்பிட்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.’
அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரை கைது செய்ய முடிந்தது.
கொலைக்கு பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் இரத்தக்கறை படிந்த பை ஒன்று என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர். 24 வயது. என்று பொலிசார் கூறியுள்ளனர்.
சந்தேகநபரும், கொலை செய்யப்பட்ட யுவதியும் விஞ்ஞானபீடத்தில் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.
சந்தேக நபரும் கொலையுண்ட யுவதியும் காதலித்து வந்த நிலையில், அண்மையில் குறித்த யுவதி காதல் தொடர்பை துண்டித்துக்கொண்டமையே இந்த கொலைக்கான காரணம் என கூறப்படுகிறது.
கொலையின் பின்னர், சந்தேக நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.