முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய ஆப்கான்

10 months ago
SPORTS
aivarree.com

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியானது ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இன்று காலை 10.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கையை பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

269 என்ற இலக்கினை நோக்கி பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை 4 விக்கெட் இழப்புக்கு கடந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் 98 பந்துகளில் 98 ஓட்டங்களை எடுத்து கசூன் ராஜிதவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பினை நழுவ விட்டார்.

அவருக்கு அடுத்தபடியாக அணி சார்பில் அதிகபடியாக ரஹ்மத் ஷா 55 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 38 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, மொஹமட் நபி 27 ஓட்டங்களுடனும், நஜிபுல்லா சத்ரன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.