புதிய எரிபொருள் விலைகள் | எரிபொருள் விநியோகத்தின் நிலைமை | 10 அப்டேட்ஸ்

1 year ago
Sri Lanka
aivarree.com

அரசாங்கம் நேற்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் சகல வகையான எரிபொருட்களின் விலைகளையும் குறைத்துள்ளது.

இதுதொடர்பான பிந்திய 10 தகவல்கள் சுருக்கமாக அய்வரி வாசகர்களுக்காக..

1) இன்று முதல் புதிய எரிபொருள் விலைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி பெற்றோல் 92 ஒக்டேன் 340 ரூபா, டீசல் 325 ரூபா, பெற்றோல் 95 ஒக்டேன் 375 ரூபா, சுப்பர் டீசல் 465 ரூபா, மண்ணெண்ணெய் 295 ரூபாய்.

2) வழமையாக எரிபொருள் விலை மாற்றம் முதலாம் திகதியே அமுலாகும் என்றாலும், தொழிற்சங்க போராட்டம் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருளுக்கான கோரிக்கையை முன்வைக்காமை போன்றவற்றால், நேற்று (29) எரிபொருள் விலை மாற்றப்பட்டது.

3) எரிபொருள் விலை சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு எரிபொருள் நிலையங்களில் குழுமி இருந்த வாகனங்கள் கலைந்து சென்றதாகப் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

4) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணியாளர்கள் சிலர் தொழிற்சங்க போராட்டத்தின் மூலம் எரிபொருள் விநியோகத்தை முடக்க முயன்றமையால், அவர்களில் 20 பேர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.

5) நேற்று நாள் முழவதும் வழமைப் போலவே எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர, அவ்வப்போது அறிக்கைகளை விடுத்து உறுதிப்படுத்தினார்.

6) நாட்டில் சீரான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, திருகோணமலையில் உள்ள தங்களது எரிபொருள் களஞ்சிய முனையத்திலிருந்து லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் மேலதிக எரிபொருளை விடுவித்ததாக அதன் முகாமைப் பணிப்பாளர் மனோஜ் குப்தா அய்வரிக்கு தெரிவித்தார்.

Suggest Video (இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை நீடிக்கப்போகிறதா? )

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை நீடிக்கப்போகிறதா? 

7) எரிபொருள் விலைக்குறைப்பை அடுத்து முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை 20 ரூபாவால் குறைப்பதாகவும், அதனை மீறுகின்ற முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருவதாகவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

8) பேருந்து கட்டணங்களை நாளை (31) முதல் 12.9 சதவீதத்தாலும், ஆரம்ப கட்டணத்தை 30 ரூபாவாகவும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

9) எரிபொருள் விலைக்குறைப்புக்கு அமைவாக ரயில் கட்டணங்களையும் குறைப்பது குறித்து ஆராயப்படுவதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

10) எரிபொருள் விலை குறைந்தாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.