தோனிக்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அறுவைசிச்சை

11 months ago
SPORTS
aivarree.com

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு வியாழன் (01) அன்று மும்பை வைத்தியசாலையில் இடது முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையானது அடுத்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கின் 17 ஆவது சீசனில் தோனி விளையாடுவதற்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16 ஆவது ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்நிலையில் இந்தாண்டு ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியாக இருந்த கேள்வியே தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? என்பது தான்.

அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடர் முடியும்போதே தோனி நிச்சயம் ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு சீசனில் விளையாடுவேன் என்று உறுதி அளித்திருந்தார்.

இருப்பினும் அதற்கு இன்னும் 8-9 மாதம் அவகாசம் உள்ளதால் பொறுத்திருந்து முடிவை எடுப்பேன் என்றும் அதற்குள் காயம் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்றும் தோனி தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் முழங்காலில் பெரிய அளவில் வலியை உணர்ந்த தோனி நிச்சயம் இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்தால் தான் அடுத்த சீசனில் விளையாட முடியும் என்பதனால் விரைவில் இந்த அறுவை சிகிச்சை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந் நிலையில் நேற்று காலை மும்பை சென்றடைந்த தோனி மருத்துவர் தின்ஷா பர்திவாலா என்ற சிரேஷ்ட வைத்தியரின் மேற்பார்வையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

மும்பையில் உள்ள பிரபலமான வைத்தியசாலையான கோகிலாபென் என்கிற வைத்தியசாலையில் ரிஷப் பண்டிற்கு சிகிச்சை அளித்த அதே வைத்தியர் தான் தோனிக்கும் சிகிச்சை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.