தங்கத்தின் விலையில் மேலும் சரிவு

1 week ago
(940 views)
aivarree.com
  • இன்றைய தங்க விலை
  • உலக சந்தையின் நிலை
  • தங்க விலை எதிர்காலம்
  • இலங்கையில் தங்க விலை எதிர்காலம்
  • தங்க விற்பனையாளர்களின் கோரிக்கை

இன்றைய தங்க விலை

கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்கத்தின் விலையில் இன்று மேலும் சரிவு ஏற்பட்டிருந்தது.

இன்றைய தினம் அங்கு 24 கறட் தங்கம் ஒரு பவுன் 166,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்திருந்தது.

அதேநேரம் 22 கறட் தங்கம் பவுன் ஒன்று 152.166 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் விலையானது 2000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர். பாலசுப்ரமணியம் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.

உலக சந்தையின் நிலை

இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறியளவில் அதிகரித்துள்ள போதும், ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

கடந்த வாரங்களில் அவுன்ஸ் ஒன்று 2050 டொலர்களாக விற்பனையாகிய நிலையில், தற்போது அது 1,961.23 டொலர்களாக குறைவடைந்துள்ளது.

கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலையானது 31.60 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தங்க விலை எதிர்காலம்

இதேவேளைத் தங்கத்தின் விலை தொடர்பான எதிர்வு கூறல்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலையானது அவுண்சுக்கு 4000 டொலர்களை தாண்டும் என்று சுவிஸ் நாட்டின் முதலீட்டு அமைப்புகள் சில தெரிவித்திருந்தன.

எனினும் உலக நாடுகள் பலவற்றின் முன்கூட்டிய கணிப்பின்படி தங்கத்தின் விலையானது இந்த ஆண்டு இறுதிக்குள் 2500-2600 டொலர்கள் வரையில் நிலவக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வங்கிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

இலங்கையில் தங்க விலை எதிர்காலம்

எவ்வாறாயினும், இலங்கையைப் பொறுத்தவரையில் தங்கத்தின் விலையானது உலகச் சந்தையின் நிலவரத்தைக் காட்டிலும், உள்நாட்டில் டொலர் பெறுமதியில் ஏற்படுகின்ற மாற்றங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி இலங்கையில் டொலர் விலை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, அந்தளவுக்குத் தங்கத்தின் விலையும் குறைவடையும் என்று தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த விபரமான விடயங்கள் ‘டோக் வித் விக்கி’ நிகழ்ச்சியில் அகில இலங்கை தங்க விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணிமினால் வழங்கப்பட்டது.

தங்கவிலையை கூட்ட பதுக்கலா | தங்கம் வாங்கலாமா விற்கலாமா? | TALK WITH VIKEY

தங்க விற்பனையாளர்களின் கோரிக்கை

இதேவேளை இலங்கையில் தங்கத்துக்கு இறக்குமதி தடை நிலவுகிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சிறியளவில் கொண்டுவரப்படுகின்ற தங்கத்தையே உள்நாட்டுச் சந்தை நம்பி இருக்கிறது.

எனவே தங்க இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைவடையும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.